முதல் நாளே 30 சதவீதம் மாணவர்கள்…மாநகராட்சி பள்ளிகளில் சரிந்தது வருகை பதிவு பெற்றோரிடம் ஆசிரியர்கள் போனில் பேச்சு| Dinamalar

ஐந்து மாத இடைவெளிக்கு பின் வகுப்புகள் துவங்கிய நிலையில், முதல் நாளே 30 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வராததால், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.

‘மட்டம்’ அடித்த மாணவர்களின் பெற்றோருக்கு அலைபேசியில் அழைத்து பேசி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் படி, ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 119 தொடக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள் என, 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில், 90 ஆயிரம் மாணவ – மாணவியர் படிக்கின்றனர்.கொரோனா ஊரடங்கால் பலர் வேலையிழந்த நிலையில், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல், மாநகராட்சி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.இதனால், நடப்பு கல்வி ஆண்டில், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, பல ஆண்டுகளுக்கு பின், ஒரு லட்சத்தை கடந்துள்ளது.அதிர்ச்சிஇந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையால், ஐந்து மாதங்களாக மூடிக் கிடந்த பள்ளிகளில், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு நேற்று முன்தினம் முதல் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.அதன்படி, 70 சென்னை மாநகராட்சி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த பள்ளிகளில், 27 ஆயிரத்து 340 மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர்.பள்ளிகள் திறப்பிற்கு முன், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுடன், மாநகராட்சி ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தினர்.அப்போது, ‘தொற்று தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன; பள்ளிக்கு வருவதால், மாணவர்களுக்கு தொற்று பரவல் ஏற்படாது’ என, நம்பிக்கை அளித்தனர். அதனால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோரும் சம்மதித்தனர்.ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்களில், மாணவர்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது. முதல் நாளில் 30 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.அழைப்புஇது குறித்து, மாநகர கல்வி அலுவலர் பாரதிதாசன் கூறியதாவது:சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிகளில் 27 ஆயிரத்து 340 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒரு சில பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் படித்து வருகின்றனர். எனவே, சமூக இடைவெளி காரணமாக, அதிகளவு படிக்கும் பள்ளிகளில், மாணவர்களை பகுதி வாரியாக பள்ளிக்கு வரும்படி அந்தந்த பள்ளிகள் அறிவுறுத்துகின்றன.

முதல் நாளான நேற்று முன்தினம் 22 ஆயிரத்து 218 மாணவர்கள் பள்ளிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில், 15 ஆயிரத்து, 24 மாணவர்கள் வந்திருந்தனர். எதிர்பார்ப்புநேற்று 22 ஆயிரத்து 405 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 14 ஆயிரத்து 205 மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அதன்படி, 70 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.

பள்ளிக்கு வராத 30 சதவீத மாணவர்களின் பெற்றோரின் மொபைல் எண்கள், அந்தந்த பள்ளி நிர்வாகத்திடம் உள்ளது. எனவே, வகுப்பாசிரியர்கள் வாயிலாக, பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறோம். பெற்றோர்களிடம் பேசியதில், அவர்களை பள்ளிக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். பள்ளி துவங்கி ஓரிரு நாட்கள் தான் ஆகிறது என்பதால், விரைவில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருவர் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –

Advertisement

நன்றி

Related posts

Leave a Comment