திருட்டு பழிக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.15 கோடி| Dinamalar

மான்ட்கோமரி:அமெரிக்காவில் திருட்டுப் பழிக்கு ஆளான பெண்ணுக்கு இழப்பீடாக 15 கோடியே 70 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த லெஸ்லெய்க் என்ற பெண், வால்மார்ட் கடையில் பொருட்கள் வாங்கியுள்ளார். அப்போது அவர், 3,500 ரூபாய் மதிப்புள்ள கிறிஸ்துமஸ் மின் விளக்குகளை திருடியதாக, கடை மேலாளர் குற்றஞ்சாட்டினார். இதை லெஸ்லெய்க் நர்ஸ் மறுத்த போதும் அதை மேலாளர் ஏற்காமல் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, லெஸ்லெய்க் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பின் இந்த வழக்கு கைவிடப்பட்டதாக லெஸ்லெய்க்கு தெரிவிக்கப்பட்டது. எனினும், வால்மார்ட் நிறுவனத்தின் சட்ட ஆலோசனை நிறுவனம், லெஸ்லெய்க் மீது வழக்கு தொடர உள்ளதாக ‘நோட்டீஸ்’ அனுப்பி வந்தது.இதை எதிர்த்து லெஸ்லெய் தொடர்ந்த வழக்கில், அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக, வால்மார்ட், 15 கோடியே 70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:லெஸ்லெய்க், கடை உதவியாளர் தயவின்றி, ‘பார்கோடு’ வாயிலாக பொருட்களை பட்டியலிட்ட போது திடீரென இயந்திரம் பழுதாகிஉள்ளது. உடனே, ஒரு பணியாளர் லெஸ்லெய்க்கு பொருட்களை பட்டியலிட உதவி உள்ளார். அந்த பணியாளர் கவனக்குறைவால், கிறிஸ்துமஸ் விளக்குகளை பட்டியலில் சேர்க்க தவறியுள்ளார்.
அதற்கு, லெஸ்லெய்க் மீது திருட்டு பழி சுமத்தியது குற்றம். மேலும், வழக்கு தொடருவதாக லெஸ்லெய்க்கை மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு வால்மார்ட் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

நன்றி

Related posts

Leave a Comment