எலான் மஸ்க்கின் ஒற்றை ட்வீட்டால் 20 சதவீத வீழ்ச்சி கண்ட ட்விட்டர் பங்குகள்

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்குவதாக கடந்த மாத இறுதியில் அறிவித்தார். இதற்காக 44 பில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டார். இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளதாக எலான் மஸ்க் இன்று காலை ட்வீட் செய்திருந்தார். எலான் மஸ்க்கின் இந்த திடீர் ட்வீட் காரணமாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் சந்தையிலும் நேரடியாக எதிரொலித்துள்ளது.

அமெரிக்க சந்தைகள் இன்றைய தினம் நிறைவடையும் போது ட்விட்டர் நிறுவன பங்குகள் சுமார் 20 சதவீதம் வீழ்ச்சி கண்டு 37.10 அமெரிக்க டாலரில் நிறைவடைந்தது. எலான் மஸ்க் தனது ட்வீட்டை பங்குச் சந்தை தொடங்கும் முன்னர் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ட்விட்டரில் 5 சதவீதத்திற்கும் குறைவான போலி கணக்குகளே உள்ளது என அந்நிறுவனம் அறிக்கை தெரிவித்திருந்தது. இந்த கணக்கில் உடன்பாடு இல்லை எனக் கூறிதான் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.  ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் தான் ட்விட்டரை வாங்குவதில் உறுதியாக உள்ளேன் எனவும் விளக்கம் அளித்து ட்வீட் செய்தார்.

கடந்த மாத தொடக்கத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் சில பங்குகளை வாங்கி, முதன்மை பங்குதாரராக உருவெடுத்த எலான் மஸ்க் அடுத்த வாரங்களிலேயே ட்விட்டரின் முழு பங்கையும் வாங்குவதாக தெரிவித்தார். எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால் டெக் உலகமே மிரண்டு போனது. இதைத் தொடர்ந்து 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டார். ட்விட்டரில் கருத்து சுதந்திரத்திற்கு பிரதான உரிமை தரப்படும் எனக் கூறிவரும் எலான் மஸ்க், இந்த ஒப்பந்தம் முடிந்ததும் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பை அவர் ஏற்பார் எனக் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார்.

ட்விட்டரில் எடிட் பட்டன் கொண்டுவருவது, நிறுவனத்தில் தொழில்நுட்ப ரீதியாக வேறு தளத்திற்கு கொண்டு செல்வது, நிறுவனத்தின் வருவாயை விளம்பரத்தை மட்டும் சார்ந்து அல்லாது பல வழிகளில் பெருக்குவது போன்ற பல்வேறு திட்டங்களை எலான் மஸ்க் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஃபோர்ப்ஸ் குளோபல் 2000 பட்டியல்: இந்தியாவில் முதலிடம், உலகளவில் 53வது இடைத்தை பிடித்து அசத்திய ரிலையன்ஸ் நிறுவனம்!

அத்துடன் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எலான் மஸ்க்கின் வருகைக்குப் பின் ட்விட்டரில் ரீ என்ட்ரி தருவாரா என பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

Related posts

Leave a Comment